அறிமுகம்
இயற்கைச் சூழலின் மீது பேரன்பும், சமூகத்தின் மீது பெரும் நம்பிக்கையும் கொண்ட 18 வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் ஒருமித்த கருத்துடன் இணைந்து இயற்கைக்குக் கேடு விளைவிக்காத, சக சமூகத்தைச் சுரண்டாத, ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை முதன்மையாகக் கொண்டு உருவாக்கியுள்ள ஒரு சூழலியல் கிராமம்தான் மைவரை.
11 ஏக்கர் பரப்பளவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் தாண்டிக்குடி கிராமத்தின் அருகே மாசில்லாத அழகிய நிலப்பரப்பில் இக்கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுயசார்பு மற்றும் நீடித்த வாழ்வியலை மையமாகக் கொண்ட இக்கிராமம் தர்க்க ரீதியிலான கூட்டு வாழ்வியல் முறைகளை நோக்கி எழுகிறது. மேலும், நஞ்சற்ற உணவு உற்பத்தி, சுரண்டலற்ற தொழில்நுட்பம், வாழ்வியல் கல்வி, மக்களுக்கான அறிவியல், வன்முறையற்ற வாழ்வு போன்ற இதர பல்வேறு முறைமைகளையும் அது சார்ந்த பயிற்சிகளையும் சிறந்த நிபுணத்துவமும் அனுபவமும் கொண்டு பொதுமக்களுக்கு வழங்குகிறோம்.